இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் வரும் மாற்றம்! இளம் வீரருக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்? முக்கிய தகவல்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசை மாற்றியமைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை டிரா செய்ய அதிக வாய்ப்பிருந்தும், இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, தோல்வியைத் தழுவியது.
குறிப்பாக 3ஆவது இடத்தில் களமிறங்கிய புஜாரா, மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 23 ரன்கள்தான் அடித்தார். இதனால், இனி வரும் போட்டிகளில் புஜாரா ஓரம்கட்டப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவர் 2019ஆம் ஆண்டிற்குப் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
இதையடுத்து எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரை நீக்கவிட்டு, மூன்றாவது இடத்தில் கோஹ்லி களமிறக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் பட்சத்தில், பேட்டிங் வரிசை பெரிய மாற்றத்தைச் சந்திக்கும். குறிப்பாக, பின் வரிசையில் மற்றொரு பேட்ஸ்மேனை சேர்க்க முடியும் என்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
கோஹ்லி மூன்றாவது இடத்தில் களமிறங்கினால், அடுத்த இடத்தில் அஜிங்கிய ரஹானேவுக்கு ஒதுக்கப்படும். தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்குவார்.
இப்படி நடந்தால் 6ஆவது இடத்தில் ஹனுமா விஹாரிக்கு கிடைக்கும். இவர் 6ஆவது இடத்தில் களமிறங்கக் கூடியவர்தான். கடந்த அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது சிறப்பாக விளையாடிய விஹாரி, அதன்பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.
இங்கிலாந்து தொடரில் கோஹ்லி மட்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்கினால், விஹாரிக்கு நிச்சயமாக இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.