பிரித்தானியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து புலம்பெயர்வோர் ஒருவர் மரணம்: ஆங்கிலக்கால்வாயில் மற்றொரு துயரம்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், புலம்பெயர்வோர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதுபோன்ற விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், அவரது உயிரற்ற உடல், பிரான்ஸ் பகுதியிலுள்ள Dunkirk என்ற இடத்தில் கரையொதுங்கியுள்ளது.
அவர் பயணித்த அதே படகில் இருந்த மற்றவர்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 10 நாட்களில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்வோர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த செவ்வாயன்று இதேபோல் Harwich பகுதியில் சில புலம்பெயர்வோர் தண்ணீரில் மூழ்கி மாயமானது நினைவிருக்கலாம்.
இதற்கிடையில், டோவரிலிருந்து கலாயிஸ் நோக்கிச் என்றுகொண்டிருந்த பயணிகள் படகு ஒன்று, கடலில் ஒரு சிறிய ரப்பர் படகில் ஒரு கூட்டம் புலம்பெயர்வோர் எரிபொருள் தீர்ந்ததால், அபாயமான வகையில் துடுப்பு போட்டு பயணித்துக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை மீட்டுள்ளது.
மற்றொரு சிறு படகுடன் இணைக்கப்பட்ட அந்த புலம்பெயர்வோர் இருந்த படகு, பத்திரமாக இழுத்துவரப்பட்டு, அதிலிருந்தவர்கள் பெரிய படகு ஒன்றில் ஏற்றப்பட்டு கலாயிஸ் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு ஒன்றின் கேப்டன், கடலில் சிறு ரப்பர் படகு ஒன்றில் புலம்பெயர்வோர் சிலர் அபாயமான நிலையில் பயணிப்பதைக் கண்டதும், உடனடியாக படகை நிறுத்தி அவர்களை மீட்டுள்ளார்.
இந்த காட்சிகளைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.