ஒலிம்பிக் துவங்கும் நேரத்தில் பிரான்சில் குழப்பம்: ரயில் பாதைகளுக்கு தீவைப்பு, வெடிகுண்டு மிரட்டல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க சிறிது நேரமே இருக்கும் நிலையில், பிரான்சிலுள்ள ரயில் பாதைகள் பலவற்றிற்கு தீவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
800,000 பயணிகள் பாதிப்பு
இன்னும் சிறிது நேரத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், பிரான்சிலுள்ள அதிவேக ரயில்கள் செல்லும் ரயில் பாதைகளில் பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளார்கள்.
ஏராளமானோர் பாரீஸ் நோக்கி பயணிக்க இருக்கும் நிலையில், ரயில் பாதைகளில் தீவைக்கப்பட்டதால், வார இறுதியில் சுமார் 800,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகலாம் என அஞ்சப்படுகிறது.
Eurostar ரயில்வே நிறுவனம், நான்கில் ஒரு ரயில் திங்கட்கிழமை வரை ரத்து செய்யப்படலாம் என்பதால், பயணம் குறித்து கவனமாக திட்டமிட்டு முடிவெடுக்குமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
இதற்கிடையில், உள்ளூர் நேரப்படி, இன்று காலை, பிரான்ஸ் சுவிஸ் எல்லையிலுள்ள Mulhouse விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது.
உடனடியாக, விமான நிலையத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். விமான சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர் அது போலி மிரட்டல் என தெரியவந்ததையடுத்து சற்று முன் விமான நிலையம் மீண்டும் துறக்கப்பட்டுள்ளது. விமான சேவை மெதுவாக சகஜ நிலைக்குத் திரும்பிவருவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், ரயில் பாதைகளில் தீவைப்பு, வெடிகுண்டு மிரட்டல் என செய்திகள் வெளியாகிவருவதால், பிரான்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |