4 வயது மகள் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் கைதான வெளிநாட்டவர்: தாயார் மீதும் வழக்கு
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் நான்கு வயது மகளை கொடூரமாக தாக்கிய வழக்கில் சிக்கிய தந்தை மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்காவ் மாநிலத்தின் Brugg பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் கடந்த 2019ல் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. 50 வயதான ஈராக்கியருக்கும் அவரது மனைவி மற்றும் குழந்தையின் பாட்டியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென்று தமது மனைவியிடம் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக பறித்த அந்த ஈராக்கியர், அப்படியே தரையில் வீசியுள்ளார். இதில் குழந்தை தலையில் மோதி விழுந்துள்ளது.
இதனிடையே அந்த நபரை அவரது மனைவியும் உறவினர்களும் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் மீண்டும் அந்த நபர் குழந்தையின் காலைப் பிடித்து தூக்கி, மீண்டும் உக்கிரமாக தரையில் வீசியுள்ளார்.
இதனால் குழந்தையின் தலையில் காயமேற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் சிலர் அந்த நபரிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளதுடன், பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் அவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்துள்ளனர். மட்டுமின்றி, குழந்தையை தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ள நபரை மிரட்டியதாகவும் இழிவாக பேசியதாகவும் கூறி குழந்தையின் தாயார் மற்றும் அந்த பாட்டியின் மீதும் பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
தற்போது அந்த ஈராக்கியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் நிபந்தனைகளின்றி நாளுக்கு 180 பிராங்குகள் அபராதமும் விதிக்க வேண்டும் எனவும், 15 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.