கருச்சிதைவு ஏற்பட்ட பெண் அகதி... மூன்று சுவிஸ் எல்லை பாதுகாவலர்கள் மீது குற்றச்சாட்டு
நாடு கடத்தப்படும்போது தன் கருவிலிருந்த குழந்தையை சாகக்கொடுத்த சிரிய அகதி வழக்கில் மேலும் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண், மற்ற சில அகதிகளுடன் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். அப்போது, அவர் வலியால் துடித்த நிலையிலும், சுவிஸ் எல்லை பாதுகாவலர்கள் அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி எதுவும் ஏற்பாடு செய்யாமல் இருந்துள்ளனர்.
நாடு கடத்தப்பட்டபின் இத்தாலியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லைக்காவலர்களின் தலைவரான ஒருவருக்கு உடல் ரீதியாக ஊறு விளைவித்தல் என்ற குற்றத்திற்காக ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், தற்போது அந்த வழக்கில் மேலும் மூன்று பாதுகாவலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் மேலதிகாரியின் உத்தரவையும் மீறி, தைரியமாக ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்திருக்கவாவது வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள், அவர்களையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.