அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வேயை சம்பவம் செய்த இலங்கை! மகுடம் சூடிய அசலங்கா.. என்ன கூறினார்?
ஜிம்பாப்வேயை வீழ்த்தியதன் மூலம் சிறந்த அணியாக மீண்டும் வந்திருக்கிறோம் என இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
மருமாணி 51 ஓட்டங்கள்
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றதைத் தொடர்ந்து, டி20 தொடரின் கடைசிப் போட்டியில் நேற்று ஆடியது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே 8 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. தடிவனஷி மருமாணி (Tadiwanashe Marumani) 44 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார். துஷன் ஹேமந்தா 3 விக்கெட்டுகளும், சமீரா 2 விக்கெட்டுகளும், பினுரு பெர்னாண்டோ மற்றும் மதீஷா பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 193 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முதல் அரைசதம் அடித்த கமில் மிஷாரா (Kamil Mishara) 43 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், குசால் பெரேரா 26 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களும் விளாசினர்.
அசலங்கா மகிழ்ச்சி
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதுகுறித்து பேசிய அணித்தலைவர் சரித் அசலங்கா, "190 ஓட்டங்களுக்கு மேலான இலக்கினை துரத்துவது எளிதல்ல. இப்படி மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது.
அவர்களை பவுண்டரிகளைக் குறைத்து 200 ஓட்டங்களுக்குள் வைத்திருக்க முயற்சித்தோம்.
மிஷாராவின் ஆட்டம் மிகவும் கவர்ந்தது. இது அவரது குணநலன்களையும் காட்டுவதாகும். நேற்று (2வது போட்டி) அடைந்த பெரிய தோல்வியைத் தொடர்ந்து, சிறந்த அணியாக மீண்டும் வந்துள்ளோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |