பிரித்தானிய இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது! உடன் மனைவி கமிலாவும் போட்டுக்கொண்டார்
பிரித்தானியா இளவரசரான சார்லஸ் நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. அங்கு முன்பைவிட தற்போது வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன் படி பிரித்தானியாவில் இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் பிரித்தானியாவின் மகாராணி 2-ம் எலிசபெத்துக்கும், 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து தற்போது ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு (72) நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 73 வயதான அவரது மனைவி கமிலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பிரித்தானியாவில் பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ள நிலையில் இளவரச தம்பதிக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.