பக்கிங்காம் அரண்மனை வேண்டாம்: மன்னர் சார்லஸ் முடிவு
பக்கிங்காம் அரண்மனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் கிளாரன்ஸ் இல்லத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
ஆனால், அவர்கள் மீண்டும் பக்கிங்காம் அரண்மனைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பக்கிங்காம் அரண்மனையை கைவிடும் மன்னர் சார்லஸ்
பக்கிங்காம் அரண்மனையில், 369 மில்லியன் பவுண்டுகள் செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
அதனால் தற்காலிகமாக மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் கிளாரன்ஸ் இல்லத்தில் வாழ்ந்துவருவதாக கூறப்பட்டது.
ஆனால், பராமரிப்புப் பணிகள் முடிந்தபிறகும், மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் பக்கிங்காம் அரண்மனைக்குத் திரும்பப் போவதில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் தொடர்ந்து கிளாரன்ஸ் இல்லத்திலேயே வாழப்போகிறார்களாம். ஏற்கனவே மன்னரும் ராணியும் 22 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்துவரும் நிலையில், மன்னர் சார்லசுக்கு பக்கிங்காம் அரண்மனையில் வாழ்வது பிடிக்காது என்றும் செய்திகள் கூறுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பக்கிங்காம் அரண்மனை இல்லை என கருதும் மன்னர் சார்லஸ், அது வீடாக இருப்பதைவிட, நல்லதொரு அலுவலகமாக இருக்கும் என்றே கருதுகிறாராம்.
ஆக, 369 மில்லியன் பவுண்டுகள் செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நிலையிலும், 2027ஆம் ஆண்டில் பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகும், பக்கிங்காம் அரண்மனை மன்னரின் வீடாக இல்லாமல் ஒரு அலுவலகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |