பூஸ்டர் தடுப்பூசிக்கு தயாராகும் சுவிட்சர்லாந்து
கொரோனா பரவலை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஆர்வம் காட்டும் நிலையில் தற்போது சுவிஸ் நிர்வாகவும் அந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து வெளியேறும் நோக்கில் பல நாடுகள் தடுப்பூசி அளிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மக்கள் முதலில் தயக்கம் காட்டி வந்தாலும், தற்போது ஆர்வத்துடன் போட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில நாடுகள் 3 வயதில் இருந்தே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தையும் செயல்படுத்த தயாராகி வருகிறது. இதனால் படிப்படியாக பாடசாலைகள் திறக்க வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொதுவாக முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு 12 மாதங்கள் வரையில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என நிபுணர்கள் தரப்பு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, சுவிட்சர்லாந்தில் 2022 தொடக்கம் வரையில் பூஸ்டர் தடுப்பூசிக்கான தேவை இருக்காது என்றே சுகாதாரத்துறை கூறி வந்துள்ளது. ஆனால் தற்போது எதிர்வரும் டிசம்பர் மாத்திற்குள் மூன்றாவது டோஸ் அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி என்ற மூன்றாவது டோஸ் அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து முதியவர்களுக்கு மூன்றாவது டோஸ் அளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என ஜேர்மனி அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே சுவிட்சர்லாந்தும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செப்டம்பர் மாதம் தொடங்கி அச்சுறுத்தல் அதிகம் கொண்ட மக்களுக்கு முதற்கட்டமாக அளிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.