ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ், கான்வே... சென்னை அணி அபார வெற்றி
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் துடுப்பட்டத்திற்கு அழைக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் ஐதராபாத் பந்துவீட்ச்சை நாலாபுறமும் பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர். அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது.
ருதுராஜ் 99 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் விளாசினார். அதன்பின்னர் வந்த அணித்தலைவர் டோனி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கான்வே அதிரடி காட்ட இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து ஐதராபாத் அணி 203 ஓட்டங்கள் இலக்குடன் விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடி தொடக்க விக்கெட்டுக்கு 58 ஓட்டங்கள் சேர்த்தனர்.
அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராகுல் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலே விக்கெட்டை இழந்தார் . அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் கேன் வில்லியம்சன் நிலைத்து ஆடி ஓட்டங்கள் சேர்த்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட .அவர் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் .
நிக்கோலஸ் பூரன் கடைசி வரை போராடி 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றி முனைப்பில் இருந்தாலும் ஐதராபாத் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை . இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.