10 இரட்டைச் சதங்கள்: சாதனை படைத்துள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை டெஸ்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசியதன்மூலம் அதிக இரட்டைச் சதங்கள் பதிவான இந்திய மைதானம் என்கிற பெருமையை சேப்பாக்கம் மைதானம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 5ம் திகதி தொடங்கியது.
இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இரட்டைச் சதம் எடுத்துள்ளார். 341 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்துள்ளார்.
இது ரூட்டின் 5-வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும். அணித்தலைவராக 3-வது இரட்டைச் சதம். மட்டுமின்றி 100-வது டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் எடுக்கப்பட்ட 10-வது இரட்டைச் சதம் இதுவாகும். 1982-ல் ஜி. விஸ்வநாத், சென்னை சேப்பாகத்தின் முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஐந்து டெஸ்டுகளில் நான்கு இரட்டைச் சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1985-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் கேட்டிங், கிரீம் பிளவர் ஆகிய இரு இங்கிலாந்து வீரர்களும் இரட்டைச் சதமெடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்கள்.
சென்னை சேப்பாக்கத்தில் பதிவான இரட்டைச் சதங்கள்:
- ஜி. விஸ்வநாத் - 1982 (டிரா)
- கவாஸ்கர் - 1983 (டிரா)
- கேட்டிங் - 1985 (இங்கிலாந்து வெற்றி)
- கிரீம் பிளவர் - 1985 (இங்கிலாந்து வெற்றி)
- டீன் ஜோன்ஸ் - 1986 (டை)
- ஹேடன் - 2001 (இந்தியா வெற்றி)
- சேவாக் - 2008 (முச்சதம், டிரா)
- தோனி - 2013 (இந்தியா வெற்றி)
- கருண் நாயர் - 2016 (இந்தியா வெற்றி)
- ஜோ ரூட் - 2021