சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்! நடிகர் தனுஷ் சொகுசு கார் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... நீதிபதி கடும் கண்டனம்
நடிகர் தனுஷ் 2015ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.
அதன் பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டு, இப்போது வாபஸ் வாங்குவதாக சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்..? தனுஷ் என்ன தொழில் செய்கிறார் என்பதை மறைத்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்த வேண்டியதுதானே, பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள்.
ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் என்று காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோடிக் கணக்கில் நீங்கள் சம்பளம் வாங்கினாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதி சொகுசு காருக்கு தனுஷ் நுழைவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.