திருமதி கனடா அழகிப்போட்டியில் முதன்முறையாக கேரளத்திலிருந்து ஒரு பெண்...
திருமதி கனடா அழகி என்னும் கௌரவம் மிக்க போட்டியில், முதன்முறையாக கேரளப்பெண் ஒருவர் பங்கேற்க இருக்கிறார். கேரளாவின் சேர்த்தலை என்ற இடத்தைச் சேர்ந்த ஷெரின் ஷிபின் (33), ஆகத்து மாதம் ரொரன்றோவில் நடைபெறவிருக்கும் திருமதி கனடா அழகிப்போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார். அவருடன் மேலும் 20 ’அழகிகள்’ களத்தில் உள்ளனர்.
கேரளப்பெண் ஒருவர் திருமதி கனடா அழகிப்போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தான் திருமதி கனடா அழகிப்போட்டியில் கலந்துகொள்வதற்கு ஷெரின் கூறும் காரணம் வித்தியாசமானது. உலகம் முழுவதும் பெண்கள் சந்திக்கும் பாலின சமத்துவமின்மை எனக்கு வேதனையை உண்டுபண்ணுகிறது என்று கூறும் ஷெரின், இந்த பிரச்சினைகளை வெளிக்கொணரும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன் என்று கூறுகிறார்.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் அனுபவித்துவரும் பல பிரச்சினைகள் உள்ளன, பிரசவ விடுப்பு குறித்த தெளிவான கொள்கை இல்லை, வேலை நேரங்களில் நெகிழ்வுத்தன்மை, குழந்தைக்கு பாலூட்டுவதற்கான தனியிட வசதி, குழந்தைகள் காப்பகங்கள் இன்மை என பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்.
அத்துடன், குழந்தை பெற்றபின், தங்கள் குடும்பத்தினர் மற்றும் பணி வழங்குவோரிடமிருந்து ஆதரவு கிடைக்காததால், தாங்கள் விரும்பிச் செய்யும் வேலையை கைவிடும் ஒரு சூழலும் காணப்படுகிறது.
இந்த அழகிப்போட்டியைப் பொருத்தவரை, அவர்கள் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற பெண்கள் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், ஆகவே, அதில் பங்கேற்று இந்த பிரச்சினைகள் குறித்துப் பேச நான் முடிவு செய்தேன் என்கிறார் ஷெரின்.
ரொரன்றோவில் வாழும் ஷெரினுடைய கணவர் ஷிபின். ஷெரின், அலைனா, சுஹானா என்னும் இரு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.