நடிகர் விஜய் வீட்டில் முதலமைச்சர்! பரபரப்பை கிளப்பிய சம்பவம்
நடிகர் விஜய் வீட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென சென்றது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, 22ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆட்சியை இழந்து எதிர்கட்சியாக உள்ள அதிமுக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூட வியூகம் அமைத்து வருகிறது.
இதில், கூட்டணி கட்சியான பாமக மற்றும் பாஜக என 2 கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. அதிமுகவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
இதற்கிடையே முன்னணி நடிகரான விஜய்யின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இது பொதுமக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற்ற 9 மாவட்டங்களுக்காக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் இயக்கம் 100-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் கவனம் பெற்றிருக்கிறது. இத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்திருக்கிறது.
இந்நிலையில், நேற்று புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே நடைபெற்றதாக முதலமைச்சர் ரங்கசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என வரிசையாக விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு வரும் நிலையில், இப்போட்டி அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருதற்காக முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.