வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனத்திலிருந்த குழந்தை மரணம்... தாய் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கனடாவில், பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட குழந்தை மரணமடைந்த வழக்கில், கவனக்குறைவு காரணமாக குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவைச் சேர்ந்த Michelle Hansonம் அவரது மூன்று வயதுடைய மகனான Kaden Youngம், வேனில் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, பெருவெள்ளம் சூழ்ந்திருந்த ஒரு சாலையைக் கண்ட Michelle, அங்கு சாலை மூடப்பட்டிருந்த நிலையிலும், பெருவெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததையும் மீறி, சாலையில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீருக்குள் வேனைச் செலுத்தியுள்ளார்.
ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்க, இழுத்துச் செல்லப்பட்ட வேன், Amaranth என்ற இடத்தினருகில், Grand River என்ற நதிக்குள் இழுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தட்டுத்தடுமாறி மகனை தூக்கிக்கொண்டு வேனிலிருந்து வெளியேறியுள்ளார் Michelle. ஆனால், நதியில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இருவரும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது குழந்தையைப் பிடித்திருந்த Michelleஇன் பிடி நழுவ, குழந்தையை விட்டிருக்கிறார்.
இதற்கிடையில், வேன் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த Michelleஐ மீட்டிருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக குழந்தை Kaden கிடைக்கவில்லை.
மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட Michelleஇன் உடலில் ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.
படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகே Kadenஇன் உடல் கிடைத்தது.
இந்நிலையில், நேற்று காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார் Michelle.
அப்போது நீதிபதி Michelleஇடம், அவரது கவனக்குறைவின் காரணமாக குழந்தை உயிரிழந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என கேட்க, கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, ஆம், ஒப்புக்கொள்கிறேன் என்றார் Michelle.
இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.