சாலையோரக் கடையில் சாலட் சாப்பிட்டதால் பார்வையும் பேச்சும் நடையும் இழந்த கனேடிய குழந்தை: ஒரு திடுக் செய்தி!
சாலையோரக் கடையில் சாலட் சாப்பிட்ட ஒரு கனேடிய குழந்தை நடக்கவோ, சாப்பிடவோ, பேசவோ, பார்க்கவோ முடியாமல் மூன்றாண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக கிடக்கிறான்.
2018ஆம் ஆண்டு, முதன்முறையாக கனடாவுக்கு வெளியே தன் குடும்பத்தை சுற்றுலா அழைத்துச் சென்றார், பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Nathan Parker. Nathan Parker, Karla Terry தம்பதி, தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவிலுள்ள டிஸ்னிலேண்டுக்கு சென்றிருந்தார்கள்.
அப்போது, கலிபோர்னியாவிலுள்ள சாலையோரக் கடை ஒன்றில் சாலட் ஒன்றை சாப்பிட்டுள்ளான் தம்பதியரின் மகனான Lucas.
அந்த ஒரு சாலட், அந்த குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியையும் பறித்துக்கொண்டது!
அந்த நேரத்தில், கனடாவிலும் அமெரிக்காவிலும் ஈ கோலை என்னும் ஒரு கிருமி வேகமாக பரவியுள்ளது. 35 பேர் அந்த கிருமியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அப்போது இரண்டு வயதாக இருந்த Lucasம் உடல் நலம் பாதிக்கப்பட, உடனடியாக கனடா திரும்பியுள்ளது Lucasஇன் குடும்பம்.
என்றாலும், அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்தில், அவனது சிறுநீரகங்களில் ஒன்று செயலிழந்து போனதும், அவனது மூளையில் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
Lucasஆல், நடக்கவோ, பேசவோ, பார்க்கவோ முடியாமல் போய்விட்டது! இப்போது ஐந்து வயதாகும் Lucasக்கு, உணவு கூட, குழாய் மூலம்தான் கொடுக்கப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் காரணம், அந்த சாலடில் இருந்த லெட்டூஸ் என்னும் கீரை.
அந்த கீரையில் இருந்த ஈ கோலை என்னும் கிருமிதான் Lucasஇன் வாழ்வையே முடக்கிப்போட்டு, அவனது குடும்பத்தின் மகிழ்ச்சியையே மொத்தமாக விழுங்கிவிட்டது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு பாதுகாப்புக்காக போராடி வரும் Bill Marler என்னும் அமெரிக்க சட்டத்தரணி, Lucas சார்பில் அந்த சாலட் கடை, அவர்களுக்கு லெட்டூஸ் வழங்கிய பண்ணை ஆகியவை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆனால், கொரோனாவால் நீதித்துறையே முடங்கிப்போய்க் கிடக்கிறது. அந்த லெட்டூசிலிருந்த ஈ கோலை கிருமிக்கு காரணம், அந்த லெட்டூஸ் பண்ணையினருகில் மாடுகள் வளர்க்கப்பட்டதே.
அந்த மாடுகளின் கழிவு, தண்ணீருடன் கலந்து லெட்டூஸ் தோட்டத்தில் நுழைந்து, கீரையில் கிருமி பரவ காரணமாக அமைந்துள்ளது.
என்ன செய்வது, மாடுகளைத் தடுக்க முடியாது, வேண்டுமானால் கீரையை நன்றாக கழுவி சாப்பிடுங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆக, ஒரு சாலட், அதிலிருந்த கிருமி, Lucasஇன் வாழ்வை நாசம் செய்துவிட்டது. கடவுள் இட்ட கட்டளைபோல் கருதி, Lucasஐ அவனது தாயும் தந்தையும் கண்ணுக்கு கண்ணாக கவனித்துக்கொள்வதால்தான், அவன் உயிருடனாவது இருக்கிறான் என்கிறார் Marler .
வேறென்ன செய்வது, கவனமாக இருங்கள், நீங்கள் சாப்பிடும் ஏதோ ஒன்று உங்கள் வாழ்க்கையையும், சந்தோஷத்தையும் மொத்தமாக பறித்துவிட முடியும் என மக்களை எச்சரிக்கத்தான் முடியும் என்கிறார் Lucasஇன் தந்தை.