மாணவரை பள்ளிக்கு அனுப்பவில்லை: சுவிஸ் பெற்றோர் மீது வழக்கு
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவரை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர் மீது பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2020 மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு பெற்றோர் காரணமின்றி மாணவரை பலமுறை பள்ளிக்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது.
இந்த வழக்கில் Tafers பொலிஸ் நீதிமன்றம் தலா 3,000 பிராங்குகள் அபராதம் விதித்துள்ளது. ஆனால் குறித்த அபராத தொகையை செலுத்த முடியாது என கூறி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளனர்.
மேலும், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நாட்களிலேயே தமது பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப மறுத்ததாக தந்தை தெரிவித்துள்ளார்.
41 வயதான தமது மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தால், தேவையற்ற பாதிப்புகளை தவிர்க்க முடிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை, எனவே நாங்கள் கவனமாக இருக்க விரும்பினோம் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவால் குடும்பத்தில் இருவரை இழந்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவரால் தமது கர்ப்பிணி மனைவிக்கும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தமது கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக தமது பிள்ளை 30 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லவில்லை எனவும், ஆனால் பள்ளி சார்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து பாடங்களும் தமது பிள்ளை முடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றே நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.