இந்திய பெற்றோரிடமிருந்து ஜேர்மன் அதிகாரிகளால் பிரிக்கப்பட்ட குழந்தை: இந்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டம்
ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், பிள்ளையை இன்னமும் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியாத ஒரு நிலை காணப்படுவதைத் தொடர்ந்து, இந்திய பிரதமருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் பிராங்க்பர்ட் நகரில் கூடிய இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள்.
கடுமையாக தாக்கப்பட்ட குழந்தை
ஏழு மாதக் குழந்தையான அரிஹா தனது பெற்றோருடன் ஜேர்மனியில் வாழ்ந்துவரும்போது கடுமையாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜேர்மன் இளைஞர் நல அலுவலகம் பிள்ளையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
அரிஹாவின் பெற்றோரான தாராவும் பவேஷ் ஷாவும் இந்தியா திரும்பிவிட்ட நிலையிலும், இப்போது இரண்டு வயதைக் கடந்துவிட்ட அரிஹா ஜேர்மனியிலேயே இருக்கிறாள்.
இந்தியக் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்ப வலியுறுத்தல்
அரிஹா தாக்கப்பட்டது தொடர்பாக தாரா, பவேஷ் தம்பதியர் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் விலக்கிகொள்ளப்பட்ட பின்பும், ஜேர்மன் அதிகாரிகள் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்பவில்லை.
குழந்தையை அதன் பெற்றோர்தான் தாக்கினார்களா என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், குழந்தை மோசமாக தாக்கப்படிருந்தது உண்மை என்று கூறும் ஜேர்மன் அதிகாரிகள், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்கள் என்கிறார்கள்.
இந்திய அரசு அரிஹாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தாலும், இந்த விடயம் தொடர்பான வழக்கு ஜேர்மனியில் நடந்துவருவதால், அவள் இந்தியாவுக்கு திரும்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கூடிய ஜேர்மன்வாழ் இந்தியர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தினார்கள்.
குழந்தையை பெற்றோருடன் சேர்த்துவைக்கக் கோரி, அவர்கள், இந்திய பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கும் வகையில் இந்த ஆர்ப்பட்டங்களை நிகழ்த்தினார்கள்.
அரிஹா இந்தியக் குழந்தை, மோடி அவர்களே குழந்தை அரிஹாவைக் காப்பாற்றுங்கள் என்று கூறும் பதாகைகளுடன் அவர்கள் நேற்று பிராங்க்பர்ட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.