காஸாவில் பட்டினியால் வாடும் குழந்தைகள்... பயங்கரமான கோலம்: ஸ்டார்மர் கடும் கண்டனம்
காஸாவில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் முன்னெடுப்பதில்லை என அறிவித்துள்ளதுடன், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் உதவிப்பொருட்கள் விநியோகத்திற்கும் இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
பயங்கரமான கோலம்
இஸ்ரேலின் இந்த மனிதாபிமான முடிவால், இனி தினசரி 10 மணி நேரம் காஸா மக்களுக்கு உணவு விநியோகம் முன்னெடுக்கப்படும். கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் கொடூர மோதலில் இஸ்ரேல் அதன் ஈவிரக்கமற்ற நடத்தைகளுக்காக சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
ஜூலை 27ம் திகதி முதல் காஸா நகரம், டெய்ர் அல்-பாலா மற்றும் முவாசியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையில் தாக்குதல் முன்னெடுக்கப்படாது. இந்த மூன்று பகுதிகளுமே தற்போது அதிக மக்கள் தொகை கொண்டவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுடன் கூடிய உதவிப் பொதிகளை தாங்களும் காஸாவில் விநியோகிக்க இருப்பதாக இஸ்ரேல் இரானுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காஸாவில் இருந்து வெளிவரும் புகைப்படங்களில் குழந்தைகளின் பயங்கரமான கோலம் பயத்தை ஏற்படுத்துவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காஸா மக்களுக்கு உணவு விநியோகம் செய்ய பிற நாடுகளை அனுமதிக்கும் இஸ்ரேலின் இந்த செயல் மிக மிக தாமதம் என்றும் கண்டித்துள்ளார். காஸாவில் இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற செயற்பாடுகளால் பஞ்சம் ஏற்படும் அபாயம் குறித்து உணவு நிபுணர்கள் பல மாதங்களாகவே எச்சரித்து வந்துள்ளனர்.
ஆனால், தற்போதும் ஹமாஸ் படைகள் தங்களது நிர்வாகத்தை வலுப்படுத்த அங்குள்ள மக்களுக்கான உதவிப் பொருட்களை கடத்துவதாகக் கூறி இஸ்ரேல் நிர்வாகம் உணவு, தண்ணீர் உட்பட அத்தியாவசிய உதவிகள் அனைத்தையும் முடக்கியது.
உலகளாவிய விமர்சனம்
சமீப நாட்களாக வெளிவரும் உடல் மெலிந்த குழந்தைகளின் புகைப்படங்கள் இஸ்ரேல் மீதான உலகளாவிய விமர்சனத்தைத் தூண்டியதுடன், அதன் நெருங்கிய நேச நாடுகளும் கண்டிக்கத் தொடங்கின.
அத்துடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட போருக்கும் அது உருவாக்கிய மனிதாபிமானப் பேரழிவிற்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே, மனிதாபிமான உதவிகளுக்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், மற்ற பகுதிகளில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர இருப்பதாகவும் அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழலில் பசியால் வாடும் மக்களும், குறிப்பிட்ட சில குழுக்களும் லொறிகளில் இருந்து பெரும்பாலான உதவிகளைப் பெறுவதால், பெரும்பாலான மக்களுக்கு உதவிகளை விநியோகிக்க முடியவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.
இதனிடையே, மே மாதத்திலிருந்து உணவு பெற முயன்ற 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |