பிரான்ஸில் சீரழிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள்: அம்பலமான பகீர் தகவல்
பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சீரழிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையிலேயே குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீன் மார்க் சாவ் தலைமையிலான தனியார் விசாரணைக் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், உலகெங்கிலும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், தொடர்ச்சியான துஸ்பிரயோகங்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, குறித்த துஸ்பிரயோகங்கள் நடந்து வருகின்றன. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்த வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
1950ம் ஆண்டு முதல் இதுவரை 330,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் சிறுவர்கள் எனவும் அவர்களின் வயது 10 -13க்குள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரோமன் கத்தோலிக்க தேவாலயம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதைவிட தம்மைக் காக்கவே நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 70 ஆண்டுகளில் பிரான்ஸ் தேவாலயங்களில் சுமார் 2,900 - 3,200 பீடோபில்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படுவதாக குறித்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கை பிரான்ஸ் மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேவாலயங்கள் தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.