நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா... கொந்தளிக்கும் சர்வதேச அமைப்புகள்
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நான்கு கனேடிய பிரஜைகளை மனிதாபிமானமற்ற முறையில் சீனா தூக்கிலிட்டதை அடுத்து சர்வதேச அளவில் கண்டனம் வலுத்துள்ளது.
மன்னிப்பு வழங்க வேண்டும்
சீனாவின் சிறப்பு துப்பாக்கி வீரர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் படுகொலைகள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்ட அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என தானும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கோரியுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒட்டாவாவில் உள்ள சீன தூதரகம், போதைப்பொருள் குற்றங்கள் காரணமாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறியதுடன், இரட்டைக் குடியுரிமையை சீனா அங்கீகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
கனேடியர்கள் நால்வருக்கு நிறைவேற்றப்பட்டுள்ள மரணதண்டனைகளை மனிதாபிமானமற்றது என்று கண்டனம் செய்த சர்வதேச மன்னிப்பு சபை, 2023 ஆம் ஆண்டில் சீனா ஆயிரக்கணக்கானோருக்கு மரணதண்டனை விதித்ததாகக் குறிப்பிட்டது.
உலகின் பிற பகுதிகளை விட சீனா ஒவ்வொரு ஆண்டும் அதிகமான கைதிகளை தூக்கிலிடுவதாக நம்பப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கை வெளியே கசியாத வகையில் அரசாங்கத்தால் ரகசியம் காக்கப்படுகிறது.
சீனாவில் பொதுவாக மரணதண்டனைகள் துப்பாக்கிச் சூடு மூலம் நிறைவேற்றப்படுகின்றன, இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் விஷ ஊசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நியாயமாகவும் கண்டிப்பாகவும்
கனேடியர்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து கனடா அரசாங்கம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். மேலும், அந்த நால்வரின் அடையாள விவரங்களை வெளியிட வேண்டாம் என்று குடும்பங்கள் அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், போதைப்பொருள் குற்றங்களுக்காக சுமார் 100 கனேடியர்கள் தற்போதும் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
சீன வெளிவிவகார் அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வியாழக்கிழமை தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் சீனா சமமாக நடத்துகிறது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் வழக்குகளை நியாயமாகவும் கண்டிப்பாகவும் கையாளுகிறது என்றார்.
இதனிடையே, மரண தண்டனைக்கு எதிரான உலக கூட்டணி அமைப்பு கடந்த 2022ல் வெளியிட்டுள்ள தரவுகளில், 2007 முதல் சீனாவில் ஆண்டுக்கு குறைந்தது 8,000 பேர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |