போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுங்கள்: நாடொன்றின் தலைவரைக் கோரும் மேக்ரான்
பிரேசிலில் நடைபெற்ற G 20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட சீன ஜனாதிபதியிடம், உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுங்கள்
பிரேசில் G 20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கிடம், உக்ரைன் போரை நிறுத்த புடினுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கேட்டுக்கொண்டார்.
ரஷ்ய ஜனாதிபதியான புடின், அணு ஆயுதக் கொள்கையில் திடீரென புதிய மாற்றம் ஒன்றை அறிவித்த நிலையில், அணு ஆயுத மோதலைத் தவிர்ப்பதில் சீனாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறியுள்ளார் மேக்ரான்.
உக்ரைனில் போரிடுவதற்காக தனது படைவீரர்களை உக்ரைனுக்கு அனுப்பும் வட கொரியாவின் முடிவால் சீனாவுக்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த மேக்ரான், ரஷ்ய ஜனாதிபதியான புடின் அணு ஆயுதக் கொள்கையில் புதிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ள நிலையில், போரை நிறுத்த சீனா புடினுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்திலேயே, எந்த நாடாவது உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமானால், அந்நாட்டின்மீது அணு ஆயுதம் பிரயோகிக்கப்படும் என எச்சரித்திருந்தார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
இந்நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் புதிய கொள்கை ஒன்றிற்கு புடின் அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, ரஷ்யாவின் மீது எந்த நாடாவது சாதாரண ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினாலே, அதாவது, உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் கதிரியக்க ஆயுதங்கள் இல்லாமல் சாதாரண ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினாலே, அந்த நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது என்கிறது ரஷ்யாவின் புதிய அணு ஆயுதக் கொள்கை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |