ஜேர்மனி, ஜப்பானை முந்தி..கார் ஏற்றுமதி வரலாற்றில் சாதனை படைத்த நாடு
சீனா 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறை
உலகின் முன்னணி வாகன ஏற்றுமதி நாடாகத் திகழ்ந்த ஜேர்மனி மற்றும் ஜப்பானை முந்தி சீனா முதலிடம் பிடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (CAAM) சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் சீனா சாதனை அளவாக 10.37 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இதன்மூலம் தமது மாதாந்திர கார் ஏற்றுமதி வரலாற்றிலேயே முதல் முறையாக சீனா 10 லட்சம் (1 மில்லியன்) வாகனங்கள் என்ற அளவைக் கடந்துள்ளது.
இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீத வளர்ச்சியையும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 75.1 சதவீத வளர்ச்சியையும் குறிக்கிறது.
மேலும், தற்போது கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சீனா, இந்த ஆண்டு 10 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பாதையில் பயணிப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்றுமதியில் மிகப்பெரிய மாற்றம்
மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் ஏற்றுமதியில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது; ஜூன் மாதத்தில் மட்டும் இவற்றின் ஏற்றுமதி 5, 23,000 யூனிட்களை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 1.6 மடங்கு அதிகமாகும்.
ஜூன் மாதத்தில், சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒவ்வொரு இரண்டு வாகனங்களிலும் ஒன்று பேட்டரி மற்றும் மின்சார மோட்டார்கள் கொண்டதாக இருந்தது. எதிர்கால வளர்ச்சி குறித்து சீனா எச்சரிக்கையுடனேயே உள்ளது.
ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி மிதமாகவே இருக்கும் என்று கணித்துள்ள சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரிகள் மற்றும் சீன மின்சார வாகன உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்ட பிற நடவடிக்கைகள் ஆகியவை சாத்தியமான சவால்களாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |