பிரான்சின் ரஃபேல் போர் விமானங்களின் உலகளாவிய விற்பனையை சீர்குலைக்க ஆசிய நாடொன்று சதி
பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறன் குறித்து சந்தேகங்களைப் பரப்ப சீனா தனது தூதரகங்களை களமிறக்கியதாக பிரெஞ்சு இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
ரஃபேல் விற்பனை
பிரான்சின் முதன்மை போர் விமானத்தின் நற்பெயருக்கும் விற்பனைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருவதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ரஃபேல் விமானங்களை வாங்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்த நாடுகளை, குறிப்பாக இந்தோனேசியாவை, அவற்றை வாங்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களைத் தெரிவு செய்யுமாறும் வற்புறுத்துவதன் மூலம் சீன தூதரகங்கள் ரஃபேல் விற்பனையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
மே மாதத்தில் நான்கு நாட்கள் நீடித்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கு இடையேயான மிகக் கடுமையான மோதலாக இருந்தன, இதில் இரு தரப்பிலிருந்தும் டசின் கணக்கான போர் விமானங்கள் பங்கேற்ற வான்வழிப் போரும் அடங்கும்.
பாகிஸ்தானின் சீனத் தயாரிப்பு இராணுவ வன்பொருட்கள், குறிப்பாக போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் - பாகிஸ்தான் இலக்குகள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களில் பயன்படுத்திய ஆயுதங்களுடன், குறிப்பாக பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் மீது எவ்வாறு செயல்பட்டன என்பது குறித்த விவரங்களை இராணுவ அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.
சண்டையின் போது மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து இந்திய விமானங்களை தங்கள் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. இதனிடையே, இந்தியா விமான இழப்புகளை ஒப்புக்கொண்டது, ஆனால் எத்தனை இழப்புகள் என்பதை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், பிரெஞ்சு விமானப்படைத் தளபதி ஜெனரல் ஜெரோம் பெல்லாங்கர் கூறுகையில், ஒரு ரஃபேல், ஒரு ரஷ்ய தயாரிப்பான சுகோய் மற்றும் ஒரு மிராஜ் 2000 ஆகிய மூன்று விமானங்கள் மட்டுமே இந்தியா இழந்ததற்கான ஆதாரங்களைக் கண்டதாகக் கூறினார்.
பாகிஸ்தானும் சீனாவும்
பிரான்ஸ் நிறுவனம் எட்டு நாடுகளுக்கு ரஃபேல் போர் விமானங்களை விற்றுள்ள நிலையில் முதல் முறையாக ரஃபேல் விமானம் ஒன்றின் அறியப்பட்ட போர் இழப்பு இதுவாகும்.
இந்த நிலையிலேயே பிரெஞ்சு உற்பத்தியாளர் டசால்ட் ஏவியேஷனிடமிருந்து போர் விமானங்களை வாங்கிய நாடுகளிடமிருந்து அவைகளின் செயல்திறன் குறித்த கேள்விகள் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, ரஃபேல் போர் விமானத்திற்கு எதிராக பாகிஸ்தானும் சீனாவும் சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை திட்டமிட்டு பரப்புவதாக பிரெஞ்சு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகளும் சீன தொழில்நுட்ப மேன்மையின் கதையைப் பரப்பின.
ரஃபேல் மற்றும் பிற ஆயுதங்களின் விற்பனை என்பது பிரெஞ்சு பாதுகாப்புத் துறைக்கு ஒரு பெரிய வணிகமாகும், மேலும் சீனா ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய சக்தியாக மாறி வரும் ஆசியா உட்பட பிற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தவும் பிரான்ஸுக்கு உதவுகிறது.
டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இதுவரை 533 ரஃபேல் விமானங்களை விற்பனை செய்துள்ளது, அவற்றில் 323 விமானங்கள் எகிப்து, இந்தியா, கத்தார், கிரீஸ், குரோஷியா, ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதில் இந்தோனேசியா 42 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, மேலும் கூடுதலாக வாங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |