தேவையில்லாமல் கனடாவை வம்புக்கிழுக்கும் சீனா: தற்போது விடுத்துள்ள மிரட்டல்
சமீபத்தில் சீன போர் விமானங்கள், சர்வதேச வான் எல்லையில் கனேடிய மற்றும் அவுஸ்திரேலிய விமானப்படை விமானங்களுக்கு தொந்தரவு கொடுத்தன.
அதனைத் தொடர்ந்து, சீனாவின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை, பிரச்சினைகளைத் தூண்டும் வகையிலானவை என்று கூறிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனா, மக்களை தேவையில்லாமல் அபாயத்துக்குள்ளாக்குகிறது என்பதை தான் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வதாக தெரிவித்தார்.
அதேபோல், சீனாவின் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய பிரதமரும் வன்மையாகக் கண்டித்தார்.
முந்தைய இரண்டு மாதங்களில், பல முறை சீன விமானங்கள் தேவையில்லாமல் கனேடிய மற்றும் அவுஸ்திரேலிய விமானங்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளன.
இவ்வளவும் செய்துவிட்டு, தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்த கனடா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது சீனா.
இன்று மிரட்டல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர், தங்கள் விமானிகள் செய்தது சரிதான், நியாமானதுதான் என்று கூறியுள்ளதுடன், அபாயமான மற்றும் தூண்டும் விதத்திலான நடவடிக்கைகள் எதையாவது எடுத்தால், கனடா மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
சீனாவின் இந்த அத்துமீறல்களுக்குக் காரணம், அது சர்வதேச வான் எல்லையில் கூடுதல் இடத்தை ஆக்கிரமிக்க விரும்புவதால் என்றும், அப்படிச் செய்தால், கனடாவின் கூட்டணி நாடுகள் அந்த இடத்தில் பறப்பது கடினமாகும் என்பதாலும் சீனா அப்படிச் செய்யலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.