ஜேர்மனிக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை: பின்னணி...
ஜேர்மனி வர்த்தக விடயங்களை அரசியலாக்கினால், அது சீனாவுடனான பொருளாதார உறவுகளை பாதிக்கும் என சீனா எச்சரித்துள்ளது.
அதாவது, 1970 முதல் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியான உறவு இருந்துவரும் நிலையில், ஓலாஃப் ஷோல்ஸ் ஜேர்மன் சேன்ஸலராக பதவியேற்றதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இடைவெளி பெரிதாகி வருகிறது.
ஜேர்மனி, சீனாவுடனான வர்த்தக உறவுகளிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு, ‘தங்களைப்போன்ற கொள்கைகளைக் கொண்ட’ குடியரசுகள் மற்றும் கூட்டாளர்களுடன் உறவு வைத்துக்கொள்ள அவர்களை நோக்கி நெருங்கி வருகிறது.
குறிப்பாக ரஷ்யா உக்ரைன் விடயத்தில் தெளிவற்ற தன்மை, கொரோனா தொடர்பிலான அந்நாட்டின் கொள்கை, உகுர் இஸ்லாமியர்களை துன்புறுத்துதல் ஆகிய விடயங்களே அந்நாட்டுடனான தங்கள் கொள்கைகளில் மாற்றங்கள் செய்ய ஜேர்மனியைத் தூண்டியுள்ளன.
ஆனால், சீனாவின் அரசியல் தொடர்பான விடயங்களில் ஜேர்மனி தலையிடுமானால், அது ஜேர்மனி சீனாவுக்கிடையிலான உறவையும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்கிறது சீனா.
வெளிநாட்டு விவகாரங்கள் நிபுணர்களோ, சீனா, ஜேர்மனி தன்னை பொருளாதார ரீதியில் சார்ந்திருக்கச் செய்ய விரும்புவதற்குக் காரணம், தனது போட்டியாளரான அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஜேர்மனியை சேர விடக்கூடாது என்பதற்காகத்தான் என்கிறார்கள்.
தன்னைப்போன்ற கொள்கைகள் கொண்ட நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ள ஜேர்மனி முயல, சீனாவோ, ஜேர்மனி தன்னை விட்டு விட்டு மற்ற நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்வதை விரும்பவில்லை. ஆகவேதான், ஜேர்மனி வர்த்தகம் தொடர்பான விடயங்களை அரசியலாக்கினால், அது சீனாவுடனான உறவை பாதிக்கும் என அந்நாடு எச்சரித்துள்ளது.