பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை அழிக்க சீனா திட்டம்!
பூமியை நோக்கி வரும் சிறுகோள்களைக் கண்காணித்து தாக்க சீனாவின் விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சீனாவின் விண்வெளி நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய விண்வெளி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இதற்காக ஒரு விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது வேண்டுமென்றே மோதி சோதனை செய்யப்படவுள்ளது.
அரசு நடத்தும் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸின் கூற்றுப்படி , சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் (CSNA) துணை வூ யான்ஹுவா, இந்த திட்டம் 2025-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
எந்த சிறுகோள் இலக்கு என்பதை சீனா இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால், இந்த சிறுகோள் கண்டறிதல் திட்டம், விண்கலங்கள், பூமி மற்றும் மனிதகுலத்தை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று யான்ஹுவா கூறினார்.
CSNA-ன் கூற்றுப்படி, மனிதகுலத்தின் விண்வெளி நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுகோள்களை பட்டியலிட்டு பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட இந்த கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு பூமி மற்றும் விண்வெளியில் தளங்கள் கொண்டிருக்கும்.
பின்னர், அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கு தொடர்புடைய தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் உருவாக்கப்படும் என்று நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
பூமியை அச்சுறுத்தும் ஒரு சிறுகோளைக் கண்டறிந்து, அதன் மீது மோதுவதற்கு விண்கலத்தை அனுப்பி, அதன் சுற்றுப்பாதையை மாற்றுவதி இந்த திட்டத்தின் குறிக்கோள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.