தேவதாசி மகனான உனக்கு எதற்கு கல்வி? பிச்சை எடு! அவமானங்களை தாண்டி கனடாவில் பேராசிரியராக உள்ள இந்தியர்
இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் குழந்தை தொழியாளியாக வாழ்வில் பல சோதனைகளை கடந்து தற்போது கனடாவின் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
சின்னய்யா ஜங்கம் என்பவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். இவர் தேவதாசியின் மகன் ஆவார். இளம் வயதில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தார் சின்னய்யா.
தேவதாசியின் மகன் என்பதால் அவருக்கு கல்வி மறுக்கப்பட்டது, எதற்காக நீயெல்லாம் படித்து நேரத்தை வீணாக்குகிறாய் என பலரும் பேசியிருக்கின்றனர். இதையெல்லாம் மீறி கல்வி பயின்றே வாழ்வில் சாதித்திருக்கிறார்.
தற்போது கனடாவின் ஒட்டாவாவில் உள்ள கர்லிடன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார் சின்னய்யா. அவர் கூறுகையில், என் தாயாரின் கனவு நான் நன்றாக படிக்க வேண்டும் என்பது தான், ஏனெனில் என் குடும்பத்தில் யாருமே கல்வி பயிலவில்லை.
நான் படிப்பதை தடுக்கவே பலரும் விரும்பினார், அதையும் மீறி படித்தேன். நான் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது என் தாயார் இறந்துவிட்டார். அது தான் வாழ்க்கையில் மிகவும் வேதனையான தருணம். என் தாய் உடலை தகனம் செய்ய 5,000 ரூபாய் தேவைப்பட்டது, இதை சேகரிக்க நான் பிச்சை கேட்க வேண்டியிருந்தது.
படித்து கொண்டே குழந்தை தொழியாளியாக கூலி வேலை, கட்டிட வேலைக்கு செல்வேன். என் தாயார் தேவதாசி ஆக்கப்பட்டார் (தற்போது தடை செய்யப்பட்ட முறை) அதாவது கோவிலுக்கு அவர் நேர்ந்து விடப்பட்டாலும் தாழ்த்தப்பட்ட சாதியினர், தீண்டத்தகாதவர்கள் என கூறி அவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, இதோடு என் தாயார் கோவில் வாசலில் பிச்சையெடுக்க கட்டாயப்படுத்தப்பட்டார்.
எல்லா கஷ்டத்தையும் மீறி நான் படித்தேன், இப்போது கூட சில சமயங்களில் நான் அவமானங்களை சந்திக்க நேரிடும். நான் இப்போது மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். நான் யார் என்பதில் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.
சின்னய்யா தற்போது தனது தாயின் நினைவுக் குறிப்பு மற்றும் இந்தியாவில் சாதியின் வரலாறு குறித்த புத்தகத்தில் பணியாற்றி வருகிறார். எனது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் துன்பங்களைப் பற்றிய எனது எழுத்துக்களுக்காக நான் நினைவுகூரப்பட விரும்புகிறேன் என அவர் கூறுகிறார்.