மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த கொடூரம்... கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்தாரியின் அதிர்ச்சி பின்னணி
ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் கார் மோதி தாக்குதலை முன்னெடுத்த நபர், ஏற்கனவே பொதுமக்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூன்று முறை எச்சரிக்கை
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய மருத்துவர் தொடர்பில் சவுதி அரேபியா நிர்வாகம் ஏற்கனவே மூன்று முறை எச்சரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. ஜேர்மனியில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்கலாம் என்றே சவுதி அரேபியா நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Magdeburg நகரில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் சந்தையிலேயே சவுதி அரேபியா நாட்டவரான 50 வயது Taleb al-Abdulmohsen என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். வெறும் 3 நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 9 வயது சிறார் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 205 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இதில் 41 பேர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 86 பேர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவயிடத்திலேயே அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஜேர்மனியில் குடியிருந்துவரும் இவர், ஜேர்மனியில் வதிவிட உரிமம் பெற்றுள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட அந்த மருத்துவர், உறுதிபட தெரிவிக்கிறேன், ஜேர்மனி போரை விரும்பினால், நாங்களும் அதை முன்னெடுப்போம். ஜேர்மனி எங்களைக் கொல்ல விரும்பினால், நாங்களும் அவர்களைக் கொன்று குவிப்போம் என பதிவிட்டுள்ளார்.
பெண் ஒருவர் புகார்
இன்னொரு பதிவில், ஜேர்மன் குடிமக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்யாமல் நீதிக்கான பாதை உள்ளதா? என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தப் பதிவுகளுக்கு ஜேர்மன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
2023ல் தமது 48,000 சமூக ஊடக ஆதரவாளர்களிடம், சவுதி அரேபியாவை எதிர்ப்பவர்களுக்கு எதிராக ஜேர்மனி எதும் செய்யாத நிலையில் நான் தற்செயலாக 20 ஜேர்மானியர்களைக் கொன்றால் என்னைக் குறை கூறுவீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் இந்த பதிவிற்கு பெண் ஒருவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே கூறபப்டுகிறது. இதனிடையே, பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் சந்தைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |