ஜேர்மனிக்குச் சென்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட விரும்புவோர் சுங்கச்சாவடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க சில பயனுள்ள தகவல்கள்
ஜேர்மனியிலிருக்கும் தங்கள் உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட விரும்பும் பிரித்தானியர்களுக்கு சில பயனுள்ள தகவல்கள்.
இதுதான் பிரெக்சிட்டுக்குப் பிந்தைய முதல் கிறிஸ்துமஸ்...
கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் நீங்கள் ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பயணிக்கத் திட்டமிட்டிருப்பீர்களானால், நீங்கள் உங்களுடன் என்னென்ன பொருட்களைக் கொண்டு செல்லலாம் என்பது குறித்த புதிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நீங்கள் ஜேர்மனியிருந்து பிரித்தானியாவுக்கோ, அல்லது உங்கள் உறவினர்கள் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்கோ பயணம் செய்யும் திட்டமிருந்தால், என்னென்ன உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை உங்களுடன் பிரித்தானியாவுக்கோ அல்லது பிரித்தானியாவிலிருந்தோ கொண்டு செல்லலாம் என்பது குறித்த விதிகளை தெரிந்துகொள்வது நல்லது.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, சில விதிமுறைகள் சமீபத்தில் மாறியுள்ளன. ஆகவே, சுங்கச் சோதனையின்போது சிக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டுமானால் கீழுள்ள கட்டுரையை வாசிப்பது நலம்.
ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்குள் செல்வோரை பிரித்தானிய எல்லை அதிகாரிகள் பெருமளவில் சோதிப்பதில்லை. ஆனால், பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்குள், அதாவது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள் நுழைவோர் என்னென்ன உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை தங்களுடன் கொண்டு வருகிறார்கள் என்பது தொடர்பான விதிகள் கடுமையாக உள்ளன.
குறிப்பிட்டுச் சொன்னால், நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடல்லாத ஒரு நாட்டிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையும்போது, மாமிசம் அல்லது பால் பொருட்களை உங்களுடன் கொண்டு வரமுடியாது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான விதிகளின்படி, விலங்குகளிடமிருந்து கிடைக்கும் எந்த பொருளையும் நீங்கள் கொண்டுவரமுடியாது என்பதால், நீங்கள் சாக்லேட்டுகளைக் கூட ஜேர்மனிக்குக் கொண்டு வரமுடியாது!
வேண்டுமானால், உங்களுடன் சிறிதளவு பழங்கள் மற்றும் காய்கறிகளையும், முட்டைகள், தேன் முதலான பொருட்களையும் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்குள் கொண்டுவரலாம்.
குறிப்பிட்ட அளவு மீன் மற்றும் மீன் தயாரிப்புகளுக்கும் அனுமதியுண்டு. அதாவது 20 கிலோகிராம் மீன் அல்லது ஒரு மீனைக் கொண்டுவரலாம்.
ஒரே ஒரு ஆறுதலளிக்கும் செய்தி, உலகம் முழுவதும் உள்ள பிரித்தானியர்களுக்கு பிடித்த ஒரு பொருளுக்கு மட்டும் தடையில்லை... அது தேநீர்... ஆனாலும், அதிலும் மாமிச உட்பொருட்கள் கலந்திருக்ககூடாது!
இதுபோக, குறிப்பிட்ட அளவு பிரித்தானிய மதுபானத்துக்கும் ஜேர்மனியில் அனுமதி உண்டு!
இன்னொரு முக்கிய விடயம். நீங்கள் குழந்தைகளுடன் பயணித்தால், பால் பவுடர், குழந்தைகளுக்கான உணவு முதலானவற்றை 2 கிலோகிராம் அளவுக்கு உங்களுடன் கொண்டுவரலாம்.
அதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தபாலில் உணவுப்பொருட்களை அனுப்பவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. மாமிசப்பொருட்கள் எதையாவது பிரித்தானியாவிலிருக்கும் உங்கள் உறவினர்கள் ஜேர்மனியிலிருக்கும் உங்களுக்கு தபாலில் அனுப்பினால், அவை ஜேர்மன் தபால் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.