பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் வாரத்தில் மருத்துவமனையை நாடிய நூற்றுக்கணக்கான சிறார்கள்
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் வாரத்தில் கொரோனா பாதிப்பால் மொத்தம் 512 சிறார்கள் மருத்துவமனையை நாடியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்மஸ் தினம் மற்றும் அதன் அடுத்த நாளுக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டிசம்பர் 24 மற்றும் 25ம் திகதிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 50 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் மாறுபாடு ஆபத்தானதாக இதுவரை அடையாளப்படுத்தப்படவில்லை என்ற போதும் சிறார்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
டிசம்பர் 19 முதல் 26 வரையான நாட்களில் 6 வயது முதல் 17 வரையான சிறார்கள் 226 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடியுள்ளது புதிய அறிக்கையில் வெளியாகியுள்ளது.
இதே வாரத்தில் 5 வயதுக்குட்பட்ட மொத்தம் 286 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் கடைசி வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்தம் 512 சிறார்களின் எண்ணிக்கை என்பது 24% அதிகரிப்பு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், பெற்றோர்களின் ஒப்புதலுடன் 12-15 வயதுடைய சிறார்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி வரையில் பெறவும், 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியும் அளிக்கப்பட உள்ளது.
மேலும், 330,000 ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு குறைந்த அளவில் பைசர் தடுப்பூசி அளிக்கவும் அரசாங்க அறிவியல் ஆலோசகர்கள் கடந்த வாரம் பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.