கொரோனா காலகட்டத்திலும் களத்தின் முன்னணியில் நின்று போராடிய செவிலியருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி
கொரோனா காலகட்டத்திலும் களத்தின் முன்னணியில் நின்று போராடிய செவிலியர் ஒருவருக்கு பிரெஞ்சு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக அவர் பிரான்சில் வாழ்ந்துவருகிறார். கொரோனா காலகட்டத்தில் முன்னணியில் நின்று பணியாற்றிய அவருக்கு, அவர் செய்த வேலையே பிரச்சினையாகியுள்ளது.
மாலியிலிருந்து பிரான்ஸ் வந்த அந்த செவிலியர், பாரீஸிலுள்ள ஒரு மருத்துவமனையில் முழுநேரமும், நர்ஸிங் ஹோம் ஒன்றில் பகுதி நேரமும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அவர் குடியுரிமை கோரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் பணியாற்றியதால், அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சைப் பொருத்தவரை, ஒருவர் வாரம் ஒன்றுக்கு 48 மணி நேரம்தான் அதிகபட்சம் வேலை செய்யவேண்டும். ஆனால், அவர் இரண்டு மருத்துவமனைகளில் வேலை செய்ததால், வாரம் ஒன்றுக்கு 60 மணி நேரம் வேலை செய்துள்ளார்.
ஆகவேதான் அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவலைத் தொடர்ந்து, மார்ச் மாதம் புதிய விதி ஒன்று அமுலுக்கு வந்தது.
அதன்படி கொரோனாவை எதிர்கொள்வதற்காக ஒருவர் 60 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. ஆகவே அந்த செவிலியர் விதிகளுக்குட்பட்டுதான் பணி செய்துள்ளார் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வருகிறார்கள்.
உள்துறை அமைச்சகம் அதை உறுதி செய்த நிலையிலும், அந்த செவிலியர் தனது விண்ணப்பம் மீண்டும் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்.
இப்படி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காகவும், மீண்டும் தாமதம் ஏற்படுவதாலும் தான் சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக அந்த செவிலியர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குடியுரிமைக்கு பொறுப்பான அமைச்சரான Marlène Schiappa, கொரோனா காலகட்டத்தில் களத்தில் முன்னணியில் நின்று போராடிய பணியாளர்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் வேகமாக பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.