கனேடிய குடியுரிமைக்காக காத்திருக்கும் 60,000 பேர்: ஒரு வித்தியாசமான சிக்கல்
கனடாவில் குடியுரிமைத் தேர்வு எழுதி குடியுரிமை பெறுவதற்காக காத்திருக்கும் சுமார் 60,000 பேருக்கு ஒரு வித்தியாசமான சிக்கல்.
ஆம், அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்னமும் நடைபெறவில்லை, அது எப்போது நடக்கும் என்பதும் தெரியாமல், அவர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
பங்களாதேஷைச் சேர்ந்த Rakhee Barua குடும்பத்தின் நிரந்தர வாழிட உரிம அட்டைகள் சென்ற ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன.
ஆனால், அவர் அதைப் புதுப்பிக்கவேண்டும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காரணம், அவர்கள் அனைவருமே குடியுரிமைத் தேர்வு எழுதி வெற்றி பெற்று கனேடிய குடிமக்களாக ஆவதற்காக காத்திருப்பவர்கள்.
அதாவது, குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மட்டும் முடிந்துவிட்டால், அவர்கள் அனைவரும் கனேடிய குடிமக்கள். அப்புறம் வாழிட உரிமம் என்னத்திற்கென எண்ணி இருந்துவிட்டது Rakhee Barua குடும்பம்.
பொதுவாக, தேர்வில் வெற்றி பெற்று மூன்று அல்லது நான்கு மாதங்களில் குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு விடும்.
ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும் அவர்களது குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடமிருந்து வரவில்லை.
Baruaவுக்கு என்ன பிரச்சினை என்றால், அவரது தாய் பங்களாதேஷில் உடல் நலமில்லாமல் இருக்கிறார்.
அவருக்கு மார்பகப் புற்றுநோய். Baruaவின் வாழிட உரிம அட்டை காலாவதியாகி, அவரது குடியுரிமை நடைமுறையும் முழுமை பெறாததால் அவரால் தன் தாயைக் காண பங்களாதேஷிற்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை!
Barua மட்டுமல்ல, ஏராளமானோர் இதேபோல் குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள்.