பிரித்தானியாவில் விடுமுறை முகாமில் பயங்கரம்: 39 வயது நபர் மீது கொலை வழக்குப்பதிவு
Clacton-on-Sea Incident 39 years old arrested: பிரித்தானியாவில் விடுமுறை முகாம் ஒன்றில் நடைபெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பில் 39 வயது நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
40 வயதுடைய நபர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் கிளாக்டன்-ஆன்-சீ(Clacton-on-Sea) பகுதியில் அமைந்துள்ள வேலி பார்ம்(Valley Farm) என்ற விடுமுறை முகாமில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இரவு 9.15 மணிக்கு அவசர கால சேவையினர் விரைந்தனர்.
அங்கிருந்த கேரவனில்(caravan) பிரின்டன்(Frinton) பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
அவருக்கு போதுமான அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

கொலை வழக்கு பதிவு
இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் வார்லே பகுதியை சேர்ந்த 39 வயது நபரான டேனியல் பாக்ஸ்(Daniel Fox) என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சனிக்கிழமை அவர் செம்ஸ்ஃபோர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இவர் மீது கொலை வழக்கு தவிர, அவசர பணியாளர்களை தாக்கியது தொடர்பான 3 பிரிவுகளிலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 பிரிவுகளிலும், ஒரு திருட்டு பிரிவிலும் பொலிஸார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு தேவையான சிறப்பு உளவியல் ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாக துப்பறியும் ஆய்வாளர் டிம் கோய்ல்ஸ் தெரிவித்துள்ளார்.