இறுதியில் காபூல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த பிரித்தானிய இளைஞர்: என்ன நடந்தது?
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வந்த சூழலில், அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய இளைஞர் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிக ஆபத்தான நகரங்களில் சுற்றுலா செல்லும் நோக்கத்தில், ஆப்கான் சென்றிருந்த 24 வயதான Miles Routledge என்பவரே தற்போது பத்திரமாக மீட்கப்பட்டவர்.
தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு முக்கிய நகரமாக கைப்பற்றி வந்த சூழலில், காபூல் நகரில் இருந்து வெளியேற பலமுறை முயன்றும் முடியாமல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பில் அவர் இருந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
ஆனால் தற்போது தாலிபான் தீவிரவாதிகளின் கைகளில் சிக்காமல் தாம் காப்பாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பர்மிங்காம் பகுதியை சேர்ந்த இயற்பியல் மாணவரான Miles Routledge தாம் காபூல் நகரில் இருந்து வெளியேறியதை சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சுமார் 100 பேர்கள் கொண்ட பொதுமக்கள் குழுவுடன் தாமும் காபூல் நகரை விட்டு வெளியேறுகிறேன் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். தாலிபான் தீவிரவாதிகள் பலரை காபூல் விமான நிலையத்தில் தாங்கள் சந்திக்க நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காபூல் நகரில் சில வாரங்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அல்பேனியா செல்ல திட்டமிட்டதாகவும் தொடர்ந்து பிரித்தானியா திரும்ப முடிவு செய்திருந்ததாகவும் அவரது நண்பர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தமது இணைய நேயர்களிடம், தாம் மரணத்திற்கு தயாராகி உள்ளதாகவும், கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர் என்பதால், இனி மொத்தமும் அவன் செயல் என குறிப்பிட்டுள்லார்.
அதே வேளை ஞாயிறன்று தாலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்ததுடன், ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.