அன்னாசி பழங்களை உருட்டி விட்டு தரவு மையத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
cm vijay inaugurate data center by rolling pineapple: சென்னை அம்பத்தூரில் கட்டப்பட்டுள்ள தரவு மையத்தை, முதல்வர் விஜய் அன்னாசி பழங்களை உருட்டி விட்டு திறந்து வைத்தார்.
தரவு மையத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்
சென்னை, அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 46 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை அமைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த தரவு மையத்தை சிங்கப்பூர் நிறுவனம் திறந்துள்ளது.
4 ஏக்கர் பரப்பளவில் 7 அடுக்கு மாடிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தரவு மையம், 4,900 சர்வர் ரேக்குகளுடன், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், கிளவுட் சேவை வழங்குநர்கள் மற்றும் பெரிய உள்நாட்டு நிறுவனங்களின் தரவுகளைச் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரவு மையத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர்.
சீன பாரம்பரிய முறைப்படி, அன்னாசி பழங்களை உருட்டிவிட்டு இந்த தரவு மையத்தை திறந்து வைத்தனர்.
அன்னாசி பழங்களை உருட்டும் சடங்கு, புதிய இல்லத்தில் செல்வம், அதிர்ஷ்டம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்படும் சீன பாரம்பரியம் ஆகும்.
இந்த நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.