மருத்துவ காப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்திய முதல்வர் விஜய் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
cm vijay increased CMCHIS medical insurance to rs25 lakhs: முதல்வர் விஜய் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில், "முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்(CMCHIS) இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு தற்போது உள்ள ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.

நவீன யுகத்தில் நோயும், நோயாளிகளும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சை கட்டணங்களும் லட்சத்தில் உள்ளது.
நடுத்தர மக்களுக்கும் அந்த சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சத்திற்கு இலவச சிகிச்சை பெற முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இது முந்தைய ஆட்சி காலங்களில் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது முதல்வர் அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
இந்த திட்டத்தில், அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு காப்பீட்டு வசதி உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000 க்கு குறைவாக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள், முதியோர் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சிறப்பு வகை தேவைகள் மூலம் தகுதி பெறலாம்.
தகுதி பெற்றவர்கள் குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள CMCHIS அட்டை வழங்கும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலை cmchistn அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |