ரேஷன் கடை, பேருந்து பணிமனை - பெரம்பூர் தொகுதியில் முதல்முறையாக முதல்வர் விஜய் ஆய்வு
தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்முறையாக சென்றுள்ள முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் ஆய்வு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பெரம்பூர் எம்எல்ஏ ஆக தொடர்கிறார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார்.

முதல்வர் வருவதால் சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். தெருக்களில் நடந்து சென்று முதல்வர் விஜய் மக்களிடம் நன்றி தெரிவித்தார்.
அங்குள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள இ சேவை மையத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 50 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கி விட்டு, 10 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளார்.

பிறகு, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள ரேஷன் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கியுள்ளார்.

அங்குள்ள தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய், அதன் பின்னர் வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைக்கு சென்று அங்குள்ள பேருந்துகளில் ஏறி ஆய்வு நடத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |