ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய்
cm vijay to attend davos meet in swiss in january 2027: முதல்வர் விஜய் தனது 2வது வெளிநாட்டு பயணமாக சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரியில் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.
சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த வாரம் தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்று வந்தார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் விஜய் அடுத்த வெளிநாட்டு பயணமாக ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 18 முதல் 22 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் அலோயிஸ் ஸ்விங்கி மற்றும் நிர்வாக இயக்குநர் மருன் கைரூஸ் ஆகியோர் முதல்வர் விஜய்க்கு விடுத்துள்ள அழைப்பைத் தொடர்ந்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஒன்றுக்கு மேற்பட்ட முறை தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்ற குழு, வாகனங்கள், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உலகளாவிய திறன் மையங்கள், சுகாதாரம், உயிர் அறிவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கி, உலகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டாளர்களுடன் 50க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியது.
இதே போல், 2025 ஆம் ஆண்டும் 'தமிழ்நாட்டை மேம்படுத்துவோம்' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன், மாநிலத்தின் உற்பத்தித் தளம், மின்னணு மற்றும் வாகனத் துறைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பத்திற்குத் தயாரான பணியாளர்களை உருவாக்கும் திட்டங்கள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற 6 இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை மாநிலங்களும் கலந்து கொண்டன.