கர்நாடகா செல்ல உள்ள முதல்வர் விஜய் - 14 ஆண்டுகளுக்கு பின் நேரடி பேச்சுவார்த்தை
தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகா செல்ல உள்ளார்.
கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், மேகதூது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52 வது கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான தமிழகத்தின் பங்கான 9.91 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், கர்நாடக அணைகளில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், போதிய மழை இல்லாததால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம் எழுதியதாகவும், அதனை ஏற்று ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு வர விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதை வேளாண்துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல்வர் கர்நாடகா செல்கிறார். அவர்கள் மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்தாலும் தமிழக அரசு அதனை ஒருபோதும் அனுமதிக்காது.
அது எங்களுடைய உரிமை. அது சம்மந்தமான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் செல்கிறார்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2012 ஆம் ஆண்டில் காவேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முதல்வர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூருவில் அன்றைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சுமூகதீர்வு ஏற்படவில்லை.
தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர், காவேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முதல்வர்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |