100 வயதை கடந்த முன்னாள் அமைச்சர்கள் - காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற முதல்வர் விஜய்
cm vijay touch feet of ex ministers hv hande, vv swaminathan: முன்னாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே மற்றும் வி.வி.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர் விஜய் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற முதல்வர் விஜய்
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதிகள் எச்.வி.ஹண்டே, வி.வி.சுவாமிநாதன் ஆகிய இருவரும் நூறு வயதை எட்டியுள்ளனர்.

மூத்த அரசியல் ஆளுமைகளான இருவரையும் போற்றும் விதமாகவும், சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் விதமாகவும் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் இருவருக்கும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
மேலும், இருவரின் கால்களிலும் விழுந்து முதல்வர் விஜய் ஆசி பெற்றார்.
இந்த நிகழ்வின் போது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் கையொப்பமிட்ட 100 ரூபாய் நோட்டை வி.வி.சுவாமிநாதன் முதல்வர் விஜய்யிடம் வழங்கினார்.
வி.வி.சுவாமிநாதன்
15.02.1927 அன்று பிறந்த வி.வி.சுவாமிநாதன், சிதம்பரம் நகர்மன்ற தலைவராக இருந்த போது, பொதுமக்கள் தங்களது புகார்கள் நேரடியாக தெரிவிக்க புகார் பெட்டியை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார்.

மேலும், 1980 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தலில் புவனகிரி தொகுதியில் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில், மதுவிலக்கு, மின்சாரம், கைத்தறி, சுற்றுலா உட்பட 13 முக்கிய துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர்.
எச்.வி.ஹண்டே
25.11.1927 அன்று பிறந்த எச்.வி.ஹண்டே 1942 ஆம் ஆண்டில் மாணவர் பருவத்திலே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார்.
1967 சட்டமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், ராஜாஜி மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இணைந்தார்.

சட்டமேலவை உறுப்பினராக இருந்த அவர், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சராக இருந்தார்.
அந்த காலக்கட்டத்தில் போலியோ ஒழிப்பு, தடுப்பூசி திட்டங்கள், தொழுநோய் கட்டுப்பாடு, கிராமப்புறங்களில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியதற்காக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருதையும், 2026 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மபூஷன் விருதையும் வென்றார்.
மேலும், சென்னையில் ஹண்டே மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.