யாரையும் சும்மா விடக்கூடாது! கடிதத்தில் பெயர்கள்... தமிழகத்தை உலுக்கிய 17 வயது மாணவி வழக்கில் திடீர் திருப்பம்
தமிழகத்தை உலுக்கிய கோவை மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 8 மாதங்களுக்கு பிறகு இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரைச் சேர்ந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் இருந்தார். இச்சிறுமி முதலில் தடாகம் சாலையில் உள்ள, தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 1 வகுப்புவரை அங்கு படித்த அவர், கடந்த கல்வியாண்டில் அங்கிருந்து விலகி, வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பொலிசார் விசாரித்தனர். அதில்,மாணவி முன்பு படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி (31) என்பவர் அளித்த பாலியல் தொல்லையின் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், பள்ளியின் முதல்வர் மீராஜாக்சனிடம் இதுகுறித்து மாணவிதரப்பில் முன்னரே புகார் அளித்தும் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மகளிர் பொலிசார், போக்ஸோ பிரிவில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (53) ஆகியோரை கைது செய்தனர்.
மாணவி தற்கொலை செய்த அறையில் இருந்து மாணவி எழுதியிருந்த கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றினர். அக்கடிதத்தில், ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ எனக்கூறி கைதான ஆசிரியரின் பெயர் மற்றும் 2 மாணவிகளுடைய உறவினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு விட்டார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்ற 2 மாணவிகளின் உறவினர்கள் யார்?, எதற்காக அவர்களது பெயரை மாணவி குறிப்பிட்டிருந்தார் என பொலிசார் விசாரித்தனர்.
மறுபுறம், மற்றொரு பொலிஸ் பிரிவினர், இக்கடிதத்தில் உள்ள கையெழுத்து உயிரிழந்த மாணவியுடையதா என்பதை கண்டறிய, அவரது பாடப் புத்தகங்களை கைப்பற்றி, ஒப்பீட்டுக்காக சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 2 சக மாணவிகளின் உறவினர்கள், கோவையைச் சேர்ந்த முகமது சுல்தான் (70), மனோராஜ் (58) எனத் தெரிந்தது அவர்களைப் பிடித்து பொலிசார் விசாரித்தனர். அதில், இருவரும் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மகளிர் பொலிசார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முகமது சுல்தான், மனோராஜ் ஆகியோர் மீதுபோக்ஸோ, சிறாரை தற்கொலைக்கு தூண்டுதல், மானபங்கம் ஆகிய பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிந்து நேற்று இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சோதனை முடிவுகள் அண்மையில்தான் கிடைத்தன. அதன் மூலம் கடிதம் இறந்த மாணவி எழுதியதுதான் என்பது உறுதியானதையடுத்தே இந்த நடவடிக்கையை எடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.