பிரித்தானியாவில் 2 பள்ளி மாணவிகளை சீரழித்து கொலை செய்தவர் விடுதலை!
பிரித்தானியாவில் 1980-களில் இரண்டு பள்ளி மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த கொலின் பிட்ச்போர்க் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் Leicestershire மாநிலத்தில் உள்ள Narborough பகுதியில் 1983-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 15 வயதான Lynda Mann எனும் பள்ளி மாணவி சீரழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை செய்த கொடூரனை கண்டுபிடிப்பதற்குள், 1986-ஆம் ஆண்டு அதேபோல் 15 வயதான Dawn Ashworth என்ற பள்ளி மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இரண்டு வழக்குகளிலும் கொலையாளி தேடப்பட்டுவந்த நிலையில், முன்னோடியில்லாத வகையில் டிஎன்ஏ (DNA) விவரக்குறிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5,000 ஆண்களை சோதனை செய்ததைத் தொடர்ந்து கொலின் பிட்ச்போர்க் (Colin Pitchfork) பிடிபட்டார்.
அவர் இரண்டு கொலைகளிலும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஜனவரி 1988-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது 61 வயதாகும் கொலின் பிட்ச்போர்க் தனது தண்டனைக் காலம் நிறைவுபெற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்டாலும், அவர் தொடர்ந்து தனது வாழ்க்கை முழுவதும் பொலிஸ் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விசாரணைக்குப் பிறகு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறையிலிருந்து விடுவிப்பதற்கான அனைத்து அளவுகோல்களையும் பிட்ச்போர்க் பூர்த்தி செய்ததாக பரோல் வாரியம் முடிவு செய்தது. அதன்பிறகு ஜூன் மாதத்தில், அவரை விடுவிப்பது பாதுகாப்பானது என்று முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு பல எம்பிக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொலின் பிட்ச்போர்க் தான் டிஎன்ஏ ஆதாரங்களைப் பயன்படுத்தி குற்றவாளியாகக் கருதப்பட்ட முதல் கொலைகாரர் என்று கூறப்படுகிறது.