பிணங்களை விற்று பிழைப்பு நடத்தும் பெண்மணி: அம்பலமான பகீர் பின்னணி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறுதி சடங்கு இல்லம் ஒன்றை நடத்திவரும் பெண்மணி ஒருவர் சடலங்களை விற்று பணம் ஈட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவ ஆய்வுக்காக சடலங்களை விற்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள அந்த பெண்மணி, சடலங்களை எரியூட்டியுள்ளதாக தொடர்புடைய குடும்பத்தினருக்கு பொய்யான தகவல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சிக்கியுள்ள 45 வயதான மேகன் ஹெஸ் என்பவர் 12 முதல் 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

சடலங்களை ஆய்வுக்காக ஒப்படைக்கலாம் என உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக போலியான ஆவணங்களையும் மேகன் ஹெஸ் தயாரித்துள்ளதாக விசாரணையில் அம்பலமானது.
மேலும், சடலங்களை எரியூட்டிய பின்னர் சேகரித்த தங்க பற்களை விற்று 40,000 டொலர் வரையில் மேகன் ஹெஸ் சம்பாதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேகன் ஹெஸ் நடத்திவந்த இறுதி சடங்கு இல்லத்தில் ஒரு சடலத்திற்கு 1,000 டொலர் வரையில் கட்டணமாக வசூலித்துள்ளார். ஆனால் ஏழைகளுக்கு இலவசமாக இறுதி சடங்குகளை முன்னெடுத்து வந்தாலும், அதிலும் அவர் ஆதாயம் தேடியுள்ளதாக கூறப்படுகிறது.

சடலங்களை எரியூட்டுவதற்கு பதிலாக, உடல் பாகங்களை பிரித்து தலை, முதுகுத்தண்டு, கைகள், கால்கள் என தனித்தனியாக மருத்துவ மாணவர்களுக்காக விற்பனை செய்து வந்துள்ளர்.
மேலும், உறவினர்களுக்கு சாம்பலுக்கு பதிலாக ரசாயன பொருட்களை அளித்து ஏமாற்றியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மேகன் ஹெஸ் மற்றும் அவரது தாயாரும் 3 வார கால நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
2010 முதல் 2018 வரையில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச பத்திரிகை ஒன்று ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையிலேயே 2020ல் மகளும் தாயாரும் கைதாகியுள்ளனர்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        