முன்பைவிட அதிக அளவில் சுவிட்சர்லாந்துக்கு வரும் வெளிநாட்டவர்கள்: காரணம் என்ன?
2022இல் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவர்களைவிட, சுமார் 81,000 வெளிநாட்டவர்கள் கூடுதலாக சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள். அதாவது, முந்தைய ஆண்டைவிட சுமார் 20,000 பேர் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்கள்.
இப்படி சுவிட்சர்லாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன?
இப்படி சுவிட்சர்லாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு எளிய விடயம்தான் காரணம் என்கிறது பெடரல் அரசு: அது, தொழிலாளர் சந்தையில் உள்ள டிமாண்ட்!
மாகாண புலம்பெயர்தலுக்கான செயலகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2022இல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 114,393. இது 2021ஐ விட சுமார் 20,000 அதிகம். இவர்களில் மூன்றாவது நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 48,042.
2022 டிசம்பர் இறுதி நிலவரப்படி, 2,241,854 வெளிநாட்டவர்கள் நிரந்தர அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் வாழ்வது தெரியவந்துள்ளது.
அதிகரிக்கும் பணியாளர் தேவை
இப்படி அதிக அளவில் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்குக் காரணம், அதிகரிக்கும் பணியாளர் தேவை ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவது எளிது என்பதால், அந்த நாடுகளிலிருந்து வந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், மற்ற நாடுகளைப் பொருத்தவரை எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் உள்ளதால், அந்த நாடுகளிலிருந்து வந்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் காணப்படுகிறது.
2022ஆம் ஆண்டின்போது, புதிதாக பணிக்கு எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 90,633 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் நீண்ட காலப் பணிகளில் சேர்ந்துள்ளார்கள்.
Photo by MICHELE LIMINA / AFP