ரஷ்யா அனுப்பிவந்த எரிவாயு முழுமையாக நிறுத்தம்: சந்தேகத்தில் ஜேர்மனி
ஜேர்மனிக்கு ரஷ்யா குழாய் வழியாக அனுப்பி வந்த எரிவாயு வழங்கல் நிறுத்தப்பட்டுள்ள விடயம் தொடர்பில், ஜேர்மனி சந்தேகம் அடைந்துள்ளது.
The Nord Stream 1 pipeline என்னும் திட்டத்தின்படி, Gazprom என்னும் எரிவாயு நிறுவனம், ஜேர்மனிக்கு குழாய் வழியாக எரிவாயு அனுப்பி வந்தது. ஆனால், வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கவிருப்பதாகக் கூறி, அந்த எரிவாயு வழங்கலை Gazprom நிறுவனம் நேற்று நிறுத்தியுள்ளது.
ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உருவான பிரச்சினைக்கு பதிலடி கொடுப்பதற்காக திட்டமிட்டே எரிவாயு வழங்கலை ரஷ்யா நிறுத்தியிருக்கலாம் என கருதும் ஜேர்மனிக்கு, மீண்டும் ரஷ்ய நிறுவனம் எரிவாயுவை வழங்கலைத் தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்ற மாதம் Nord Stream 1 திட்டத்தின் கீழ் குழாய் மூலம் வழங்கும் எரிவாயுவின் அளவை 60 சதவிகிதமாக குறைத்துவிட்டது ரஷ்யா.
தனது எரிவாயு வழங்கும் அமைப்பிலுள்ள கருவி ஒன்று பழுதாகிவிட்டதால்தான் எரிவாயுவின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த Gazprom நிறுவனம், அந்தக் கருவியை சரி செய்வதற்காக கனடாவுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த கருவியை ரஷ்யாவுக்கு திருப்பிக் கொடுக்க இயலாது என்று கனடா கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அந்தக் கருவியை ரஷ்யாவிடம் ஒப்படைக்குமாறு ஜேர்மனி கனடாவை வற்புறுத்துகிறது. உக்ரைனோ, அதை ரஷ்யாவுக்குக் கொடுக்கக்கூடாது என கனடாவை வலியுறுத்துகிறது. அப்படி கனடா அந்தக் கருவியை ரஷ்யாவிடம் ஒப்படைக்குமானால், அது மாஸ்கோ மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும் செயலாகும் என்கிறது உக்ரைன்.
இப்படி ஒரு பிரச்சினை நடந்துவரும் நிலையில் இந்த எரிவாயு வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் எரிவாயு வழங்கல் தொடருமா என்பதில் ஜேர்மனிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.