கொரொனா பாதிப்பால் பிரபல இசையமைப்பாளர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி
1990 காலகட்டத்தில் இந்தி திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.
இந்தி திரையுலகில் 1990 காலகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற இசையமைப்பாளர்கள் நதீம் அக்தர் சைஃபி மற்றும் ஷ்ரவன் குமார் ரத்தோட்.
இவர்கள் இருவரும் இணைந்து நதீம்- ஷ்ரவன் என்ற பெயரில் Aashiqui (1990), Saajan (1991), Hum Hain Rahi Pyar Ke (1993), Pardes (1997), Raja Hindustani (1996) உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளதுடன், அதன் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.
ஆனால் காலப்போக்கில் கணினி இசை பிரபலமடைந்து புதிய இசையமைப்பாளர்களின் வருகையாலும் இவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்தது.
இந்த நிலையில் 2000 ம் ஆண்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் 2009ல் பிரபல இயக்குநரின் படத்திற்காக இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் மும்பையில் உள்ள ரகேஜா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன் சேர்க்கப்பட்டார்.
66 வயதுடைய ஷ்ரவன் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தகவல் வெளியானது.
இதனை அவரது மகன் சஞ்சீவ் ரத்தோடு உறுதி செய்துள்ளார். ஷ்ரவன் மறைவை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.