ஜேர்மன் கடற்கரையில் சிக்கிக்கொண்டுள்ள திமிங்கலம்: கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்
பல ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் ஒன்று ஜேர்மன் கடற்கரை ஒன்றில் ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ள விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் கரையில் சிக்கிகொண்டுள்ள திமிங்கலம்
ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை நேற்று மக்கள் கவனித்துள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதன் உடலில் சுற்றியிருந்த வலையை அறுத்தெறிந்துள்ளனர்.
பின் மெல்ல அதன் தலைப்பகுதியை கடலை நோக்கித் திருப்பி, அது எப்படியாவது கடலை நோக்கி நீந்திச் சென்றுவிடுமா என அவர்கள் காத்திருக்க, அந்த திமிங்கலமோ மீண்டும் கரையைப் பார்த்து திரும்பியுள்ளது.
32 அடி நீளமுடைய, பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த திமிங்கலத்தை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாது, ஏனென்றால், அப்படிச் செய்வது அதற்கு காயத்தை ஏற்படுத்திவிடும்.
அது ஒரு இளம் ஆண் திமிங்கலம் என கருதப்படுகிறது, ஏனென்றால், இளம் திமிங்கலங்கள் இப்படி எப்போதாவது இடம்பெயர்வதுண்டாம்.
என்றாலும், இந்த திமிங்கலம், எதனால் இப்படி கரையில் வந்து சிக்கிக்கொண்டது என்று தெரியவில்லை.
அந்த திமிங்கலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம், காயமடைந்திருக்கலாம், சோர்வடைந்திருக்கலாம் அல்லது துரதிர்ஷ்டவசமாக இங்கு வந்து சிக்கியிருக்கலாம் என்கிறார் துறைசார் நிபுணரான Stephanie Gross என்பவர்.
மீட்புக் குழுவினர், அந்த திமிங்கலத்தின் அருகில் வேகமாக படகுகளை செலுத்துவதன் மூலம் அலைகளை உருவாக்குவது முதலான பல்வேறு விடயங்கள் மூலம் அதை கடலுக்குள் திருப்பி அனுப்ப முயன்றுவருகிறார்கள்.
என்றாலும், அது கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே தங்கிவிடுமானால், அதற்கு ஆபத்துதான் என நிபுணர்கள் கூறியுள்ள விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |