வங்கக்கடலில் புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம்.., கரையை கடப்பது எப்போது?
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நேற்று காலை புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வடக்கு மேற்கு திசையில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் வேகம் மணிக்கு 3 கிலோமீட்டராகக் குறைந்தது.
இதனால், புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் புதன்கிழமை இரவு புயல் உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், புயல் உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 490 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இது வடக்கு- வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையையொட்டி மெதுவாக நகர்ந்து வருவதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமை காலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்றும் கணித்துள்ளது.
அப்போது சூறாவளி காற்று மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |