இலங்கை தமிழர் பகுதியில் தொடரும் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள்
தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளியின் மகனான சுகிர்தன் வடிவமைத்துள்ளார்.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் குறித்த இணைப்பு செயலியை வடிவமைத்துள்ளார்.
குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்க முடியும் என சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகிர்தன் மேலும் தெரிவிக்கையில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரண தரம் வரை கல்வி கற்று தற்போது கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர் கல்வியை தொடர்ந்து வருகிறேன்.
பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து தொழிநுட்ப வளர்ச்சி நோக்கி பயணிக்கும் மாணவர்களை தட்டிக் கொடுக்க யாரும் முன்வருவதில்லை.
இவ்வாறான தொழிநுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கணணி வசதியோ, பொருளாதார வசதியோ எமக்கு இல்லை. அவ்வாறான உதவிகள் கிடைக்குமிடத்து தொழிநுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.